நடிகை பலாத்கார வழக்கில் திலீப்புக்கு நிரபராதி பட்டம் முன்னாள் பெண் டிஜிபி மீது போலீசில் புகார்

திருவனந்தபுரம்: கேரளா சிறைத்துறை டிஜிபியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் ஸ்ரீலேகா. தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அந்த சேனலில் நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் நிரபராதி என்றும், அவர் மீது போலீசார் பொய்யான வழக்கு பதிவு செய்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இது தவிர இன்னும் சில கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பல்வேறு தரப்பில் இருந்தும் பெண் டிஜிபிக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியது. நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு குறித்து ஒரு முன்னாள் டிஜிபி இவ்வாறு கூறியது நீதிமன்ற அவமதிப்பு என்றும், அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் சட்ட நிபுணர்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீலேகாவிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே திருச்சூரை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான குசுமம் ஜோசப் திருச்சூர் எஸ்பியிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீலேகா எர்ணாகுளத்தில் பணியில் இருந்த போது சுனில்குமார் தங்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாக பல நடிகைகள் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றங்கள் நடந்தது தெரிந்த பிறகும் சுனில்குமார் மீது ஸ்ரீலேகா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து உள்ளார். அப்போதே அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இவ்வளவு பெரிய குற்றம் நடந்திருக்காது. எனவே முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ஸ்ரீலேகாவுக்கும், நடிகர் திலீப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் 2 பேரும் வாட்ஸ் அப்பில் நடத்திய சாட்டிங் விவரம் வெளியாகி உள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், தனது யூடியூப் சேனலை பார்க்க வேண்டும் என்று திலீப்பிடம், ஸ்ரீலேகா கூறுவதும், அதற்கு திலீப் கண்டிப்பாக சேனலை பார்க்கிறேன் என்று பதில் கூறுவதும் இடம்பெற்று உள்ளன.

இதற்கிடையே திலீப்புடன், சுனில்குமார் எடுத்த புகைப்படம் போட்டோஷாப் அல்ல என்றும், நான் தான் அந்த போட்டோவை எடுத்ததாகவும் கொச்சியை சேர்ந்த போட்டோகிராபர் ஒருவர் கூறி உள்ளார். மேலும் சிறையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஸ்ரீலேகா கூறிய அனைத்தும் பொய் என்றும், அதை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: