கடனுக்காக உறவினர்கள் டார்ச்சர் தேனி எஸ்பி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

தேனி : கடனை உடனே கேட்டு உறவினர்கள் தொல்லை கொடுப்பதாக கூறி, இளம்பெண் தேனி எஸ்.பி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். தேனி மாவட்டம், கூடலூர் கன்னிகாளிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவனேஷ் மனைவி கவுமாரி. இவர் தனது மகன்கள் மணிவேல், கிஷோர் வேல், தாயார் காந்திமதி ஆகியோருடன் நேற்று தேனி மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கவுமாரி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து, அவரை மீட்டு தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரித்த போது, கவுமாரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பண்டக சாலை நடத்துவதற்காக உறவினர்கள் சிலரிடம் ரூ.20 லட்சம் வரை கடனாக பெற்று கடை ஆரம்பித்துள்ளார். கடை ஆரம்பித்த நிலையில் கொரோனா தொற்று பரவி தொழில் பாதிக்கப்பட்டது. இதனால் இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கணவர் சிவனேஷ் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், தொழில் நடத்த கொடுத்த கடன் தொகையை கேட்டு உறவினர்கள் கவுமாரியை நச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுமாரி நேற்று தேனி மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம் வந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இச்சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: