ஆரணியில் கல்லூரி மாணவிக்கு `புட்பாய்சன்’ எதிரொலி அசைவ ஓட்டல், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஆரணி :  ஆரணியில் உள்ள அசைவ ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

ஆரணி டவுன், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பூபதி, ராணுவ வீரர். இவரது மனைவி சட்டக்கல்லூரி மாணவி அனிதா(30). கடந்த 7ம் தேதியன்று அனிதா  தனது குழந்தையுடன் ஆரணி புதிய பஸ் நிலையத்தில் உள்ள சிக்கன் கடையில் சிக்கன் 65,  மீன் வறுவல் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டார். பின்னர், அவருக்கு புட்பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் கலைஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிக்கன் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அங்கிருந்த சிக்கன் மற்றும் மீன் உணவு மாதிரிகளை சேகரித்து, சேலம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து,  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணி டவுனில் உள்ள அசைவ ஓட்டல்களில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்தது, சிக்கன் 65 வாங்கி சாப்பிட்டு மாணவிக்கு புட்பாய்சன் ஆனது என தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் மேற்பார்வையாளர் அண்ணாமலை, களப்பணி உதவியாளர் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று புதிய பஸ் நிலையத்தில் உள்ள அசைவ ஓட்டல்கள், சிக்கன் கடைகள்,  ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் தரமற்ற சிக்கன், மீன் விற்பனை செய்யப்படுகிறதா, கடைகள் சுத்தமாக உள்ளதா, இறைச்சி,  மீன் உள்ளிட்டவைகளை பாதுகாப்பான முறையில் வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

பின்னர், சுகாதாரமாக இல்லாத ஓட்டல் மற்றும் சிக்கன் கடை என 4 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும், ஓட்டல், இறைச்சி கடைகளை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும், இறைச்சி மற்றும் உணவு பொருட்களை பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

Related Stories: