எழும்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகளிடம் தொடர் கைவரிசை; வடமாநில கொள்ளையர்கள் கைது.! 47 செல்போன்கள் பறிமுதல்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் அருகே கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணிகளிடம் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 47 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணிகளிடம் தொடர் செல்போன் திருடப்படுவதாக எழும்பூர் போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன்படி எழும்பூர் ரயில் நிலையம் அருகே போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பயணிகள் பேருந்தில் ஏற்றும்போது அந்த கூட்ட நெரிசலின் போது பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்டனர்.

இதை கவனித்த போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பேருந்த நிறுத்தத்தற்கு வரும் பயணிகளிடம், பேருந்து ஏறும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர் விசாரணை நடத்தினர். அதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், ஆந்திராவை சேர்நத் சாய்குமார் (25) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி நெமிலிச்சேரியில் அவர்கள் தங்கி இருந்து அறையில் போலீசார் சோதனை செய்தனர். அதில், பயணிகளிடம் திருடிய விலை உயர்ந்த செல்போன்கள் உட்பட 47 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: