மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்: கடலூர் அருகே பரபரப்பு

கடலூர்: கடலூர் அருகே சான்றோர்பாளையத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரு தரப்பு மோதலை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர், மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் முதுநகர் அருகே உள்ள சான்றோர்பாளையம் ஊராட்சியில், 9வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் நேற்று காலை தொடங்கியது. இந்த வார்டில் 4 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் இந்த தேர்தலில் சான்றோர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர், ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி, இரு தரப்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் நெட்டித்தள்ளி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த, கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். மேலும் ஒரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்கு சென்று, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்கள் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்து மண்ணெய் கேனை பிடுங்கி இருவர் மீதும் தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து அந்த பகுதியில் பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர், மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சான்றோர்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: