திருவண்ணாமலை செல்லும்போது மனு மாணவன், மாணவிக்கு உடனடி சாதிச் சான்றிதழ்: சென்னை திரும்பும்போது முதல்வர் வழங்கினார்

சென்னை: திருவண்ணாமலை செல்லும் வழியில் செஞ்சியில் மாணவன், மாணவி சாதி  சான்றிதழ் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து முதல்வர் சென்னை திரும்பும் வழியில் மாணவர்களுக்கு சாதி சான்றிதழை நேரில் வழங்கினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் திருவண்ணாமலை செல்லும் வழியில், செஞ்சியில் அவரை முருகன் என்பவரின் மகன் வாசன் மற்றும் மகள் பூஜா ஆகியோர் சந்தித்தனர். அப்போது, தங்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக பட்டியலின சாதி சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே, முதல்வர் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டு மனு அளித்தனர்.

அந்த மனுவை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய விசாரணை மேற்கொண்டு சாதி சான்றிதழ்கள் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருவண்ணாமலையில் அரசு விழாவை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று செஞ்சியில் அவர்களுக்கு பட்டியல் இனத்துக்கான சாதி சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் மாணவர்களின் பெற்றோர் உடனிருந்தனர்.

Related Stories: