அமர்நாத்தில் மேகவெடிப்பு வெள்ளத்தில் மாயமான 40 பக்தர்கள் கதி என்ன?: தேடும் பணி தீவிரம்

ஜம்மு: அமர்நாத்தில்  மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 40 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்கான யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. கடந்த 8 நாட்களில் ஒரு லட்சம்  பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் மாலை அமர்நாத் பனிக்குகை பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை கொட்டியது. இதனால், அப்பகுதியில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டு, மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டு இருந்த பக்தர்களின் கூடாரங்களை அடித்துச் சென்றது.

இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்று 16 ஆக உயர்ந்தது. மேலும், இப்பகுதியில் சிக்கி இருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்ட பக்தர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக்குழு போன்றவை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.  காணாமல் போனவர்களில் பலர் இறந்திருக்கக் கூடும் என்று கருதப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது.

உள்ளூர் மழையே காரணம்

வானிலை மையம் விளக்கம்

‘அமர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையே காரணம். அங்கு மேகவெடிப்பு ஏற்படவில்லை. மாலை 4.30 முதல் 6.30 வரையில் இப்பகுதியில் 31 மிமீ மழை பெய்ததே வெள்ளத்துக்கு காரணம். ஒரு மணி நேரத்தில் 100 மிமீ மழை கொட்டினால் மட்டுமே, அது மேகவெடிப்பு என்று கருதப்படும்,’ என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

< யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள போதிலும், ஜம்முவில் இருந்து நேற்று 11வது பிரிவாக 6 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் புறப்பட்டு சென்றனர்.

< காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் உள்ள குந்தி வனப்பகுதியில் நேற்று மாலை மேகவெடிப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Related Stories: