கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை: சீனர்களுக்கு விசா வழங்கியது தொடர்பான வழக்கில் நடவடிக்கை..!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2010- 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பூட்டியிருந்த ஒரு அறையில் மட்டும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தாமல் திரும்பி சென்றனர். கார்த்தி சிதம்பரத்தின் மனைவி லண்டனில் இருந்ததால் அவரது பீரோ சாவி கிடைக்கவில்லை. இதனால் இன்று மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொண்டனர். ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரும் வீட்டில் இல்லாத போதும் சோதனை நடைபெறுகிறது.

Related Stories: