பொன்னேரி: பழவேற்காடு கடல் பகுதியில் கூணங்குப்பம், செம்பாசி பள்ளிக்குப்பம், திருமலை நகர் உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அரங்கு குப்பம், வைரவன் குப்பத்துக்கு இடையே புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து கடந்த மாதம் 17ம் தேதி மீனவர்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போத, மீன்பிடி துறைமுகத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், பழவேற்காட்டில் நேற்று மாலை 16 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களுடன் துரை. சந்திரசேகர் எம்எல்ஏ தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் மீண்டும் நடந்தது. அப்போது பெரும்பாலான மீனவர்கள், ‘அரங்கம் குப்பம், வைரவன்குப்பத்துக்கும் இடையே மீன்பிடி துறைமுகம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பழவேற்காடு ஏரிக்கும் கடலுக்கும் 500 மீட்டர் இடைவெளியில் தேர்வு செய்த இடத்தை மாற்றி மறுஆய்வு செய்து, கூனங்குப்பம் கிராமத்துக்கு வடக்கு பக்கமாக புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கலாம்’ என்று கருத்து தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், ‘உங்களது கருத்துகள் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். மாற்று இடம் குறித்து தமிழக அரசு இறுதி முடிவெடுக்கும்’ என்றனர்.