பெரியகுளம் அருகே 6 சந்தன மரங்கள் வெட்டி திருட்டு

பெரியகுளம் : தனியார் நிலத்தில் வளர்க்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான சந்தன மரங்கள் வெட்டி திருடப்பட்டுள்ளதாக நில உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். விவசாயி. இவருடைய நிலத்தருகே பத்துக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. தனசேகரன் கடந்த மாதம் டெல்லியில் மத்திய அரசு பணியில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றார். 20 நாட்கள் கழித்து வந்து பார்த்தபோது, அவரது நிலத்தில் இருந்த 6 சந்தன மரங்கள் மற்றும் 2 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு திருடு போய் இருந்தன. இதுகுறித்து தேனி வனச்சரக அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.

தனசேகரன் கூறுகையில், ‘‘பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரம் மற்றும் தேக்கு மரங்கள் கலெக்டர், மாவட்ட வன அலுவலர், வருவாய் துறை அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்பே வெட்டப்படும். அரசு அனுமதி இல்லாமல் 15 முதல் 20 ஆண்டுகள் வளர்க்கப்பட்ட சந்தன மரங்கள் எப்படி வெட்டப்பட்டது என தெரியவில்லை. வெட்டப்பட்ட மரங்களின் அடிப்பாகம் முதல் நடுப்பாகம் வரை காணாமல் போய் உள்ளது. மேல் பாகங்கள் மட்டும் அப்பகுதியில் உள்ள வேலியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

வெட்டப்பட்டுள்ள சந்தன மற்றும் தேக்கு மரங்களை 25 ஆண்டுகள் கழித்து வெட்டினால், அதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இதுகுறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி சமர்தாவிடம் கேட்டபோது, ‘‘ சந்தன மரங்கள் வெட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: