பள்ளி ஆய்வு செய்ய வந்தபோது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கேம்ப் ரோடு - பெருங்களத்தூர் இணைப்பு சாலையில் தரைப்பாலம்: நெடுஞ்சாலை துறையிடம் கலெக்டர் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: கேம்ப் ரோடு-பெருங்களத்தூர் இணைக்கும் சாலையில் தரைப்பாலம் அமைக்காததால், அப்பகுதியில் கலெக்டர் ராகுல்நாத்  திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், அண்ணாநகர், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், மப்பேடு புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், கேம்ப் ரோட்டிலிருந்து பெருங்குளத்தூரை இணைக்கும் வகையில், பல கோடி மதிப்பில் 150 அடி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் நேற்று காலை திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது, கேம்ப் ரோட்டில் இருந்து பெருங்குளத்தூர் செல்லும் இணைப்பு சாலையில் தரைப்பாலம் அமைக்காமல் நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைத்து விட்டதாகவும், இதனால் 10 அடி உயர சாலையில் ஏற முடியாமல் பள்ளி குழந்தைகள், அன்றாட வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் விழுந்து, எழுந்து செல்வதாகவும் மாவட்ட கலெக்டரிடம் பெண்கள் புகார் கூறினர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அப்பகுதிக்கு நேரில் சென்று திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட ஆலப்பாக்கம் கிராமம், வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தாங்கள் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரும், இதேபோல் எஸ்எஸ்எம் நகர், டிவிஎஸ் நகர், ராமசாமி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் புத்தூர் ஏரியில் கலந்து அகரம் ஏரியில் சென்றடையும். இதில் நீர் வரத்து செல்லக்கூடிய பாதையின் குறுக்கே மழைநீர் தரைப்பாலம் அமைக்காமல் நெடுஞ்சாலைத்துறையினர் 10 அடி உயரத்திற்கு 150 அடி சாலை அமைத்து விட்டனர். இதனால், மழைக்காலங்களில் இப்பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால் 10 அடி உயர சாலையில் ஏற முடியாமல்  சைக்கிளில் செல்லும் பள்ளி குழந்தைகள், இருசக்கர வாகனங்களில் அன்றாடம் வேலைக்கு சென்று வருவோர் என அனைத்து தரப்பினரும் அதில் விழுந்து எழுந்து செல்கின்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம்,  பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனால், தினந்தோறும் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வலியுறுத்தினர். அப்போது, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய்கிருஷ்ணன், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன், துணை தலைவர் விஜயலட்சுமிசூர்யா, ஊராட்சி செயலர் ராமானுஜம் ஆகியோரை அழைத்து நீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும்,  பொக்லைன் இயந்திரம் மூலம் போர்க்கால அடிப்படையில் தூர்வாரவும் உத்தரவிட்டார். இதேபோல், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு சாலையின் குறுக்கே மழைநீர் செல்ல தரைப்பாலம் அமைக்கவும் உத்தரவிட்டார். இதனால், நெடுங்குன்றம் ஊராட்சியில் நேற்று காலை முதல் மாலை வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

* ஆசிரியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் திடீரென ஆய்வு நடத்தினார். இங்கு, ஒவ்வொரு வகுப்பறைக்குள் சென்று பள்ளி மாணவர்களை எழுந்து நிற்க சொல்லி படிக்க வைத்து ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்கள் சரிவர படிக்க முடியாமல் திணறினர். பின்னர், கலெக்டர் ஆசிரியர்களை அழைத்து சரியான முறையில் பாடம் நடத்தும்படி எச்சரித்தார்.

Related Stories: