தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி: 150 பேர் பங்கேற்றனர்

திருவள்ளூர்: திருவள்ளூரில் தீயணைப்பு துறை சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், 7 மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள், திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் முரளி, பாலசுப்பிரமணி, அப்துல் பாரி, லட்சுமி நாராயணன், ஹார்னீஷா ஆலம் பிரியதர்ஷினி, சையத் முகமது ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீயணைப்பு துறை வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் போன்ற 7 மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று, துறை சார்ந்த போட்டிகளான அணி வகுப்பு பயிற்சி, ஏணி பயிற்சி, கயிறு ஏறுதல், நீர்விடு குழாய் போட்டி, தந்திர கதம்ப முறை பயிற்சி, நீச்சல் போட்டி போன்ற போட்டிகளிலும், உடல் திறனை வலுப்படுத்தும் விதமான போட்டிகளான தடகளம் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எரிதல், தடை தாண்டுதல், கூடைப்பந்து, கைப்பந்து போட்டிகளில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், திருவள்ளூர் ஆயுதப்படை டிஎஸ்பி பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: