கேளம்பாக்கம் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் தீ விபத்து ரூ. 20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷமீர் (40). இவர், கேளம்பாக்கத்தை அடுத்துள்ள செங்கண்மால் கிராமத்தில் ஓஎம்ஆர் சாலையில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு தான் தங்கி இருந்து அறைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அவரது கடையில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் புகை வருவதாக கட்டிடத்தின் உரிமையாளர் நம்பிராசன் அலைபேசி மூலம் அவருக்கு தகவல் அளித்தார்.

அங்கு வந்த சமீர் கடையை திறக்க முயற்சித்தார். அதற்குள் கடைக்குள் ஏற்பட்ட தீ மளமளவென எரிந்து கடை முழுவதும் பரவியது. இதையடுத்து, சிறுசேரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து போராடி தீயை அணைத்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 2 ரெப்ரிஜிரேட்டர்கள், 2 ஏசி இயந்திரங்கள், 10க்கும் மேற்பட்ட மின் விசிறிகள், அலங்கார பொருட்கள், மின் விளக்குகள் உள்ளிட்ட ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி இருந்தது.

இதையடுத்து, ஷமீர் கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  

Related Stories: