காளி ஆவணப்பட இயக்குனருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல்: கோவையில் இந்து இயக்க தலைவி கைது

கோவை: ஆவணப்பட இயக்குனருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்த சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்க தலைவியை கோவையில் போலீசார் கைது செய்தனர். மதுரையை சேர்ந்த லீனா மணிமேகலை, ‘காளி’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன் இருப்பதுபோல் உள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், கோவை மாவட்டம் சொக்கம்புதூர் ஜீவா பாதையை சேர்ந்த சஷ்டி சேனா, இந்து மக்கள் இயக்க தலைவர் சரஸ்வதி (45) என்பவர் பேசியுள்ளார். அதில், அவர், லீனா மணிமேகலை குறித்து அவதூறாக மிரட்டும் தோணியில் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து செல்வபுரம் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து சரஸ்வதியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: