பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு

சென்னை: இந்தியாவில் தமிழகம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் போட்ட விதைதான் என்று சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 5 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்காக முப்பரிமாண பகிர்வு மெய்நிகர் கல்வி ஆய்வகத்தின் தொடக்க விழா, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் நேற்று நடந்தது.

அதில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கான உருவாக்கப்பட்ட மெய்நிகர் உயர் தொழில்நுட்பப் பள்ளியை தொடங்கி வைத்தனர். அப்போது பள்ளி மாணவ மாணவியருடன் இணைந்து,   முப்பரிமாண உருவங்களை காட்டும் ஹெட்செட் அணிந்து அவர்களும் பள்ளிப் பாடப்பொருள்களை மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் பார்த்தனர். இந்த கல்வி  முறை முதற்கட்டமாக சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 5 பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான ஹெட்செட் ஒன்றின் மதிப்பு ரூ.45 ஆயிரம். இவை ஒரு பள்ளிக்கு 20  வீதம், 5 பள்ளிகளில் 100 ஹெட்செட்கள் வழங்கப்படுகிறது. பின்னர் இந்த கல்வி முறை தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசியதாவது: இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும். பெரியார், அண்ணா, நமது தலைவர் கலைஞர், இப்போதுள்ள தலைவர் மு.கஸ்டாலின் ஆகியோர் எனக்கு சொல்லிக் கொடுத்தது என்னவென்றால், மிகப் பெரிய செல்வமான கல்வியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான். இங்குள்ள மாணவ, மணவியருக்கு இந்த கருவியை பொருத்தும் போது, எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முன்பு கணினி வாங்கிக் கொடுத்தது தான் நினைவுக்கு வந்தது. இப்போதுள்ள மாணவர்கள் தெளிவாகவும், திறமையாகவும் இருக்கின்றனர். இந்தியாவில் கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான். இப்போது இந்த புதிய கல்வி முறையை 6 முதல் 9ம் வகுப்புவரை 5 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.  முதலில் ஆசிரியர்களுக்கு இது குறித்து பயிற்சி அளித்து, பின்னர்  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இது தமிழகம் முழுவதும் உள்ள மாணவ மாணவியருக்கு கொண்டு செல்ல  இருக்கிறோம்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது: புதிய முயற்சியாக இந்த மெய்நிகர் ஆய்வகம் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் கல்விக்காக அதிக அளவில் உதவியுள்ளார். கல்லூரி நாட்களில் நாங்கள் அதிகமாக பேசியது நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் செய்த பணிகளைப் பற்றித்தான். அவரின் தந்தை முரசொலி மாறன் ஒன்றிய அமைச்சராக இருந்தபோதுதான் தமிழகத்தில் தொழில் புரட்சி ஏற்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணமாக இருந்தது தலைவர் கலைஞர்தான். அவரின் தொகுதியில் தான் இப்போது உதயநிதி ஸ்டாலின் பல பணிகளை செய்து வருகிறார். இந்த புதிய கல்விமுறைய தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் பள்ளிகளில் விரைவில் கொண்டு வரப்படும்.

* தயாநிதி மாறன் எம்பி வாழ்த்து

தயாநிதி மாறன் எம்பி பேசும்போது, ‘இந்த புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கல்வி  முறையை முதலில் சேப்பாக்கம் தொகுதியில் செயல்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்ற பள்ளிகளில் செயல்படுத்தலாம் என்று முடிவு எடுத்த சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. நாங்கள் படிக்கின்ற காலத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட பாட புத்தகங்களில் இடம் பெற்ற பாட பொருள்கள் கருப்பு, வெள்ளை நிறத்தில் மட்டுமே இடம் பெற்றிருந்தன. பின்னர் கலரில் வந்தது. இப்போது  பார்த்தால், விர்ச்சுவல் முறையில் கொண்டு வந்துவிட்டார்கள். இதன் சிறப்பு மாணவர்களுக்கு தான் சென்று சேரும். சற்று காலத்துக்கு முன்பு பள்ளிகளில் டிஜிட்டல் போர்டு பயன்படுத்தப்பட்டது. கற்பித்தலுக்கு எளிதானது என்று அந்த  டிஜிட்டல் போர்டு கருதப்பட்டது. அந்த முறையை மாநகராட்சிப் பள்ளிகளில் கொண்டு வர வேண்டும் என கலைஞர் விரும்பினார்.

அதையும் கடந்து கொரோனா காலத்தில் கணினி மூலம் ஆன்லைன் வகுப்புகள் வந்தன. அதன் மூலம் மக்கள் தொழில்நுட்பத்தை  புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது பிள்ளைகளை யுடியூப்பில் இருந்தும்  வீடியோ கேம்களில் இருந்தும் வெளியில் கொண்டு வருவதுதான் கடினமாக இருக்கிறது. இந்த காலத்தில் தற்போது மெய்நிகர் ஆய்வகம் ஒரு அருமையான தொழில்  நுட்பத்தை கொண்டு வந்துள்ளனர். இது கண்டிப்பாக வெற்றி பெற்று மாணவர்கள் பயன்பெற்றும் வெற்றி பெறுவார்கள். இதே சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக  இருந்த  தலைவர் கலைஞர் இதே நாளில் டைடல்  பூங்காவை தொடங்கி வைத்தார். அதே தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் தற்போது மெய்நிகர் ஆய்வகத்தை தொடங்கி வைத்துள்ளார். இது வெற்றி பெற்று  அனைத்து பள்ளிகளுக்கும் செல்ல வேண்டும்,’ என்றார்.

Related Stories: