விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: தேமுதிக வேண்டுகோள்

சென்னை: விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேமுதிக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஏற்கனவே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும் தேமுதிக தலைமை கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

இனிமேல், இதுபோன்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை தேமுதிக நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம். அடுத்தவரின் உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பி அதன் மூலம் ஆதாயம் தேடுவதை இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவது சகஜம் தான். ஆனால் சொந்த ஆதாயத்திற்காக முற்றிலும் தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருவது வருந்தத்தக்க விஷயம். இனி இதுபோன்ற கீழ்த்தரமான விஷமத்தனமான அனைவரையும் குழப்பும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். விஜயகாந்த் உடல்நிலை குறித்து தலைமை கழகம் வெளியிடும் அறிக்கையே உண்மையானது, இறுதியானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: