விளம்பார் கிராமத்தில் இரண்டு ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி 44 ஏக்கர் ஆக்கிரமிப்பு பயிர்கள் அகற்றம்-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளம்பார் கிராமத்தில் உள்ள நார்த்தாங்கல் ஏரியின் மொத்த பரப்பளவு 147.5 ஏக்கர். இந்த ஏரியை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 28.85 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்து கரும்பு, நிலக்கடலை, மக்காச்சோளம், மாட்டுத்தீவனபுல் உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி செய்திருந்தனர். மேலும் அதே கிராமத்தில் உள்ள மற்றொரு ஏரியான அரசந்தாங்கல் ஏரி மொத்த பரப்பளவு 40 ஏக்கர்.

இதில் சுமார் 15.27 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாய பயிர் சாகுபடி செய்திருந்தனர். இதனால் விளம்பார் கிராம ஏரியானது சுருங்கியது. மழை காலங்களில் நீர்பிடிப்பு குறைந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை விரைந்துஅகற்ற நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தர் உத்தரவிட்டார்.

 அதன்படி கடந்த மாதம் கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் முதல் கட்டமாக இரண்டு ஏரியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றினர்.

நேற்று முன்தினம் விளம்பார் கிராமத்தில் உள்ள நார்த்தாங்கால் ஏரி மற்றும் அரசந்தாங்கல் ஏரி ஆகிய இரண்டு ஏரி பகுதியில் மீதமுள்ள 11 ஏக்கர் பரப்பளவில் இருந்த பயிர்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், நடராஜன் ஆகியோர் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் முழுமையாக அகற்றப்பட்டது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி, ஊராட்சி செயலர் பூமாலை மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். விளம்பார் கிராமத்தில் உள்ள இரண்டு ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: