உள்ளாட்சி பிரதிநிதிகள் 10,000 பேர் நாமக்கல் மாநாட்டில் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் பொம்மைகுட்டைமேட்டில், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இம்மாநாட்டில், மாநிலம் முழுவதும் இருந்து உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். நாமக்கல்-சேலம் சாலை பொம்மைகுட்டைமேட்டில், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நேற்று காலை தொடங்கியது. இதற்காக 2 லட்சம் சதுரஅடியில் பிரமாண்ட மேடை மற்றும் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டின் முகப்பு சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங் தோற்றத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அமர தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.40 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்தார். தொடர்ந்து, மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் படத்திற்கு, முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி., வரவேற்று பேசினார். திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்மாநாட்டில் கருத்தரங்குகள் நடந்தது. ‘மத்தியில் கூட்டாட்சி,  மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தலைப்பில் ஆ.ராசா எம்பி., ‘திமுக உருவாக்கிய நவீன தமிழ்நாடு’ என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்பி., ‘திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம்’ என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘இது தான் திராவிட இயக்கம்’ என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், ‘பெண்களின் கையில் அதிகாரம்’ என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசினர்.

அத்துடன் காலை நிகழ்ச்சிகள் முடிந்தன. மதிய உணவு இடைவேளைக்கு பின், மாநாட்டில் திமுக வரலாற்று சுவடுகள் காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  தொடர்ந்து, ‘மக்களோடு நில், மக்களோடு வாழ்’ என்ற தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் பொன்முடி, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜி, மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்ரமணியன், கயல்விழி, மதிவேந்தன், சேகர் பாபு, அன்பரசன், மூர்த்தி, மெய்யநாதன், சிவசங்கரன், செஞ்சி மஸ்தான், காந்தி, கீதா ஜீவன், சாமிநாதன், பெரியகருப்பன், கணேசன், அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, மற்றும் எம்பி.க்கள், எம்எல்ஏ.,க்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: