இடைத்தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி சமாஜ்வாடியில் செயற்குழு உறுப்பினர்கள் நீக்கம்: அகிலேஷ் அதிரடி

லக்னோ: உபி.யில் சமாஜ்வாடி கட்சியின் இளைஞர், மகளிர் அணி உள்பட அனைத்து தேசிய, மாநில, மாவட்ட அளவிலான செயற்குழு நேற்று முதல் முழுவதுமாக கலைக்கப்பட்டுள்ளன. உபி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நடந்த சட்டப்பேரவையில் சமாஜ்வாடி கட்சி 124 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இருப்பினும், சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில், சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக கருதப்படும் ராம்பூர், அசம்கர்க் மக்களவை தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. இந்த தொகுதிகள் கை நழுவி போனது சமாஜ்வாடிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், `உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கட்சி தலைவர் பதவி தவிர, கட்சியின் இதர தேசிய, மாநில, மாவட்ட அளவிலான இளைஞர், மகளிர் அணி உள்ளிட்ட செயற்குழுக்கள் அனைத்தும் உடனடியாக கலைக்கப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜ.வை எதிர்கொள்ள கட்சியில் தேவையான அதிரடி மாற்றங்களை செய்யவே, கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குழுக்களுக்கு விரைவில் புதிய நியமனங்களை அவர் செய்வார் என தெரிகிறது.

Related Stories: