பஞ்சாப் அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 5 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

சண்டிகர்: பஞ்சாபில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 92 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பகவந்த் சிங் மான் பதவியேற்றார். இவர் பதவியேற்ற பின்பு ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், பஞ்சாப் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. புதிதாக சேர்க்கப்படும் அமைச்சர்கள் பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பஞ்சாப்பில் மொத்தம் 18 அமைச்சர்களை நியமிக்க முடியும். ஏற்கனவே 10 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். அவர்களில் சுகாதார அமைச்சராக இருந்த விஜய் சிங்லா, டெண்டர் வழங்க கமிஷன் கேட்ட விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். எனவே, நிர்வாகத்தை சிறப்பாக நடத்த கூடுதலாக இன்று 5 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது, பகவந்த் சிங் முதல்வரான பிறகு நடக்கும் முதல் அமைச்சரவை விரிவாக்கமாகும்.

Related Stories: