நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்: திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்த பின் ஓபிஎஸ் பேட்டி

சென்னை: இன்று வரை நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்த பின் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜ கூட்டணி கட்சி வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று சென்னை வந்தார். தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தார். அப்போது வெளியில் வந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கட்சியின் வெற்றி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரித்து அதிமுக சார்பாக எங்களது இதய பூர்வமான ஆதரவை தெரிவித்துள்ளோம். அதிமுக சட்ட விதிப்படி இன்று வரை நான் தான் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: