பழங்குடியினரை சேர்ந்தவர் ஜனாதிபதி வேட்பாளர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் கனவு நிறைவேறி உள்ளது: எடப்பாடி பேச்சு

சென்னை: பழங்குடியினரை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின்  கனவு நிறைவேறி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு நேற்று சென்னை வந்தார். சென்னையில் ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ஆதரவு எம்பி, எம்எல்ஏக்களுடன் சென்று அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதமர் மோடி அறிவித்தார். அதிமுகவின் சார்பில் பிரதமரின் அறிவிப்பை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். ஏட்டளவில் மத ஒற்றுமையைப் பற்றி பேசிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்த போது, அதை முழு மனதுடன் ஆதரித்தவர்களில் முதன்மையானவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

அதேபோல் 2012ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த பி.ஏ. சங்மாவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், பாஜ, தெலுங்கு தேசம் கட்சியினர் உட்பட பலர் ஆதரித்தனர். இருப்பினும் உதட்டளவில் பழங்குடியினர் நலன், சமூக நலன் பற்றி பேசும் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் அவரால் அத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  கனவு நிறைவேற உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார். திரவுபதி முர்மு ஏழை, எளியோர் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார், இவருக்கு தலைசிறந்த நிர்வாக அனுபவம் உள்ளது, இவர் நம் நாட்டின் தலைசிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார் என நம்புகிறேன் என்று  பிரதமரே இவரை பாராட்டியுள்ளார். இந்திய குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிடும், திரவுபதிக்கு அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவு அளிக்கப்படும்.

Related Stories: