ராமநாதசுவாமி, அருணாச்சலேஸ்வரர், மீனாட்சியம்மன் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரைவில் தொடங்கப்படும்: மேலும், 5 கோயில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

சட்டமன்ற அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், அறநிலைய துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் திருமகள், ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கடந்த 2021- 22ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிப்புகளில் 90 சதவீதம் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் இந்தாண்டு 2022-23 சட்டமன்ற மானிய கோரிக்கையில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே 5 கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் மற்றும் மதுரைமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய 3 கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

10 கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் தற்போது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மேலும், 5 கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். 121 கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பசு மடங்கள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

மேலும், பசுமை கோயில்கள் திட்டத்தின் கீழ் 5 கோயில்களின் அன்னதான கூடங்களில் பசுமை எரிவாயு திட்டம் ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன. கோயில்களின் மேம்படுத்துவது குறித்து மாதம்தோறும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடன் சீராய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அறிவிக்கப்படாத அறிவிப்புகளும் செயல்படுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வாடகை நிலுவை தொகையை வசூலிக்கவும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

Related Stories: