கேளம்பாக்கத்தில் பரபரப்பு: குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் குப்பை கொட்ட வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சி சென்னையை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதியாகும். குறைந்த பரப்பளவு கொண்ட இந்த ஊராட்சியில் ஏராளமான மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை முதலில் கோவளம் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வந்தது. அப்பகுதி மக்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் ஜோதிநகர் பகுதியையொட்டி குப்பை கொட்டப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணி நடந்தது. ஜோதி நகர் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது கேளியம்மன் கோயில் அருகில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதியையொட்டி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் வீடுகள் கட்டி மக்கள் குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில் குப்பை கொட்டப்படும் இடத்தில் கிடக்கும் பொருட்களை எடுத்து செல்ல வருவோர் குப்பைகளை தீவைத்து கொளுத்திவிட்டு செல்கின்றனர்.  இதனால் உருவாகும் புகைமண்டலம் கேளியம்மன் கோயிலை சுற்றி வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், சுவாச கோளாறை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த  மக்கள், தங்கள் பகுதி அருகில் குப்பை கொட்டி எரிக்க கூடாது என கூறி, குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன் மற்றும் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.  இந்த சம்பவத்தால்  கேளம்பாக்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன் கூறுகையில், “கேளம்பாக்கம் ஊராட்சியில் போதிய அரசு புறம்போக்கு நிலம் இல்லை. ஒரு சில நிலங்கள் அதிக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் எங்களால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. வருவாய் துறையிடம் ஒதுக்குப்புறமான அரசு புறம்போக்கு நிலத்தை அடையாளம் கண்டு ஒப்படைக்குமாறு கேட்டுள்ளோம். அவர்கள் ஒதுக்கி தந்தால் அந்த இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். அப்போது குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும்” என்றார்.

Related Stories: