இறக்குமதி வரியை ஒன்றிய அரசு தளர்த்தியதால் ஒரு கிலோ நூல் விலை ரூ.40 குறைவு

திருப்பூர்: ஜூலை மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு ரூ.40 குறைக்கப்படுவதாக நூல் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்பிற்கு மிக முக்கிய மூலக்கூறான நூல் விலை கடந்த பல மாதங்களாகவே உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ. 30 உயர்ந்திருந்தது. மே மாதம் மேலும் ரூ.40 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டன.

இதனால் திருப்பூர் தொழில் துறையினர் கடும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை குறைக்க வலியுறுத்தியும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் நூல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்திருந்தது. அதன்படி தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ நூல் விலை ரூ.350 முதல் ரூ.420 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத அளவில் பஞ்சுவிலை உயர்ந்த நிலையில் இறக்குமதி வரி தளர்த்தப்பட்டதால் நூல் விலை குறைந்துள்ளது.

இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒன்றிய அரசு பஞ்சுக்கான இறக்குமதி வரியை குறைத்ததன் காரணமாக நூல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நூல் விலை குறைந்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நூல் விலை உயர்வை காரணம் காட்டி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்திய நிலையில், தற்போது குறைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. 

Related Stories: