சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்கா இன்று மாலை சந்திப்பு

சென்னை: எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, இன்று காலை கேரளாவில் இருந்து  சென்னை வந்தார். அவர் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்திக்கிறார். அப்போது திமுக மற்றும் கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன்  முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த  மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய  ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்மு  போட்டியிடுகிறார்.

அவர் தனக்கு ஆதரவு தரும்படி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா களம் காண்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்தலைவராக இருந்த அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அவர் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.

நேற்று தனது 11 பேர் குழுவுடன் கேரளாவில் கம்யூனிஸ்ட்  மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டினார். இந்த சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில், இன்று நண்பகலில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் யஷ்வந் சின்காவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கிறார். சிறிது நேர ஓய்வு பின்பு, யஷ்வந்த் சின்ஹா இன்று மாலை 5 மணியளவில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் செல்கிறார்.

அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார். அப்போது, தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். பிறகு மாலை 7 மணியளவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து இரவு சென்னையிலேயே தங்குகிறார். யஷ்வந்த் சின்ஹாவின் சென்னை வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவர் தங்கியுள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் உயர் அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு அவருடன் இணைந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் செய்தியாளர்களை யஷ்வந்த் சின்கா சந்திக்கிறார். இன்று இரவு கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர் நாளை காலை 10 மணி விமானம் மூலம் ராய்ப்பூர் புறப்பட்டு செல்கிறார்.

Related Stories: