பங்கில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கறிஞர் உள்பட இருவர் கைது: கேளம்பாக்கம் அருகே பரபரப்பு

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் அருகே பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தகராறில் ஈடுபட்டவரின் வீட்டுக்கு சென்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கறிஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கேளம்பாக்கம் அடுத்த தையூர், குப்பம்மாள் நகரை சேர்ந்தவர் சங்கர் (60). பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். கேளம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த இருவர் அவரை வரிசையை விட்டு தள்ளிச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

அதற்கு, சங்கர் மறுப்பு தெரிவித்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து, சங்கர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து,  போலீசார் விசாரணை நடத்தியதில் பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி தகராறு செய்த நபர்கள் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவபிரசாத் (26) மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ்வரன் (20) என தெரிய வந்தது. இதை தொடர்ந்து கேளம்பாக்கம் போலீசார் சம்பந்தபட்ட இருவரின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்திவிட்டு திரும்பினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 அளவில் தையூர் குப்பம்மாள் நகர் பகுதியில் இருந்த பெயிண்டர் சங்கரின் வீட்டுக்கு சென்ற இருவரும் அவரிடம் ஏன் போலீசில் புகார் கொடுத்தாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.

மேலும், கத்தியைக் காட்டி மிரட்டியதால் பயந்து போன சங்கர் கூச்சல் போட்டார். அவரின் கூச்சலைக் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால், ஆத்திரமடைந்த சிவபிரசாத் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோர் பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டியதோடு, அங்கிருந்தவர்கள் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதனால், அங்கிருந்த பொதுமக்கள் நாளாமுறமும் சிதறி  ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கத்தியைக் காட்டியும், பெட்ரோல் குண்டு வீசியும் பொதுமக்களை மிரட்டிய புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவபிரசாத் (26) மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ்வரன் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், கைது செய்யப்பட்ட சிவபிரசாத் மீது தாழாம்பூர் காவல் நிலையத்தில் வாகன திருட்டு வழக்கு உள்ளது என கூறினர்.

Related Stories: