சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்: ரெய்டு நடத்துமா லஞ்ச ஒழிப்பு துறை: எதிர்ப்பார்த்து காத்திருக்கும் பொதுமக்கள்

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவிக்கின்றனர். அதனால், அங்கு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரெய்டு நடத்துவார்களா  என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து கத்திருக்கின்றனர்.ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் 2012ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சுங்குவார்சத்திரம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பத்திரபதிவு, வில்லங்க சான்று, திருமணம் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. மேலும், இடநெருக்கடியாக இருப்பதால், ஆவணங்கள் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.இதனையடுத்து, சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் கட்ட இடஒதுக்கீடு செய்யபட்டு ரூ94.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டது.

இதனையடுத்து, சார் பதிவாளர் அறை, காத்திருப்போர் அறை, கம்ப்யூட்டர் அறை, பதிவு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் புதிய கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. தற்போது, சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் கட்டபட்டு வருகிறது. இதனால், சுங்குவார்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளுக்குநாள் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் நில விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால், இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 50 முதல் 70 வரையில் பத்திரப்பதிவு நடைபெற்று வந்தது. தற்போது ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நில பத்திரபதிவு செய்ய ரூ 10 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரையில் கையூட்டு கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: நிலத்தினை பத்திர பதிவு செய்ய அரசு நிர்ணயிக்கப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டு தொகையில் பத்திரம் வாங்க வேண்டும். தற்போது, நிலத்தினை பத்திரப்பதிவு செய்ய ஊழியர்களுக்கு ரூ5 ஆயிரம் முதல் ரூ10 ஆயிரம் வரையிலும் சார் பதிவாளர் மற்றும் தலைமை எழுத்தருக்கு ரூ10 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரையில் கையூட்டு பெறப்படுகிறது. கொடுக்க மறுக்கும் ஆவணங்கள் பதிவு செய்யபடாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. மேலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பே பணத்தை செலுத்த வேண்டும் என்று எழுதப்படாத சட்டமாக உள்ளது. எனவே, கையூட்டு பெரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: