தொட்டபெட்டாவில் கார் கவிழ்ந்தது, சுற்றுலா வந்த பீகார் மாணவர்கள் 6 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

ஊட்டி: பீகாரில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர்களின் கார், தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலையில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். பீகாரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உதித் (26), ரூபேஸ் (25), விக்கி (25), அனில் (25), சீபு (25), நீத்து (25) ஆகிய 6 பேர் நேற்று காலை ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

மாலை ஊட்டி தாமஸ் சர்ச் சாலையைச் சேர்ந்த டிரைவர் குரூசு என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்துகொண்டு தொட்டபெட்டா சிகரத்தை பார்வையிடுவதற்காக சென்றனர். தொட்டபெட்டா காட்சிமுனைக்கு சென்று பார்த்து ரசித்த பின் ஊட்டி புறப்பட்டனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், இடதுபுறமாக 50 பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுனர் உள்பட 6 பேரும் எந்த காயமும் இன்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஊட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் தேனாடு கம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொட்டபெட்டா காட்சிமுனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல சிறிது நேரம் தடை விதிக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது. விபத்து குறித்து தேனாடுகம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: