தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்யும் வகையில் நெல்லையில் ரூ.62 கோடியில் பொருநை அருங்காட்சியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நெல்லை: தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்யும் வகையில் நெல்லையில் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ஒவ்வொரு தொகுதியாக சென்று பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல் பொருட்களின் விபரங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்தார். பண்டைய தமிழர்களின் வாழ்க்கை ஆற்று நாகரிகத்தை ஒட்டி அமைந்திருந்தது. தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகம் தோன்றி வாழ்ந்திருந்தது என்பது ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் நடத்திய அகழாய்வில் தெரியவந்துள்ளது.

இப்பகுதி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையிலும், பண்டயை தமிழர்களின் தொன்மையான வாழ்வை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் நெல்லையில் ரெட்டியார்பட்டி மலைச்சாலையில் ரூ.56.60 கோடி மதிப்பீட்டில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து கடந்த 18.05.2023 அன்று அடிக்கல் நாட்டினார். இங்கு பொதுப்பணித்துறை சார்பில் 13 ஏக்கர் நிலத்தில் 54 ஆயிரம் சதுர அடியில் ஆதிச்சநல்லூர் தொகுதி ஏ மற்றும் பி கட்டிடம் 16,486 சதுர அடியில் தரைதளம் மற்றும் முதல் தளமும், சிவகளை கட்டிடம் 8 ஆயிரத்து 991 சதுர அடியில் தரைதளம், முதல் தளமும், கொற்கை தொகுதி ஏ மற்றும் பி கட்டிடம் 17 ஆயிரத்து 429 சதுர அடியில் தரைதளம், முதல் தளத்துடன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன.

ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இணைப்புச் சாலை அமைக்கப்பட்டு, அழகு நிறைந்த குளம், குளத்தின் மீது பாலம், சுற்றுச்சுவர், பூங்காக்கள், வண்ண விளக்குகள், நீரூற்று, சுற்றுச்சூழல் திறந்தவெளி திரையரங்கு, திறந்தவெளி கூட்டரங்கம் போன்ற பல்வேறு பணிகள் மக்களை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பூங்காக்கள், சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு வசதிகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டு ரூ.62 கோடியில் பொருநை அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டது. பழம் பெருமை பேசும் வகையில் வெகு நேர்த்தியாக இயற்கை மாறாமல் அமைக்கப்பட்டுள்ள இந்த பொருநை அருங்காட்சியகத்தை நெல்லைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திறந்து வைத்தார்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என ஒவ்வொரு தொகுதிகளாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அகழாய்வின் போது கிடைத்த பொருட்களை ஒவ்வொரு தொகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து பார்வையிட்டு வியந்தார். 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்திய மனிதன், அதை காட்சிப்படுத்தியுள்ள விதம் முதல்வரை பெரிதும் கவர்ந்தது. ஒவ்வொரு அரங்கிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தொல்பொருட்களின் விபரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். முதல்வர் திறந்து வைத்ததை முன்னிட்டு பொருநை அருங்காட்சியகம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. அந்த பகுதி நான்கு வழிச் சாலையே விழாக்கோலம் பூண்டிருந்தது.

* பொருநை தமிழரின் பெருமை உரக்கச் சொல்வோம்; காணொலியில் முதல்வர் பெருமிதம்
பொருநை அருங்காட்சியகத்தின் சிறப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெளியிட்ட உரையில் கூறியிருப்பதாவது: பொருநை ஆற்றங்கரையின் முக்கியமான இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை விரிவாக நடத்திய அகழாய்வுகளில், ஏராளமான சான்றுகள் வெளியே கொண்டுவரப்பட்டு இருக்கிறது. தொல்லியல் அகழாய்வுகளில் இதுவரை கிடைத்த இரும்பு பொருட்களிலேயே, காலத்தால் முந்தைய இரும்பு சிவகளையில் கிடைத்த இரும்புதான் என்பதும் அறிவியல் அடிப்படையிலான காலக்கணிப்பு முடிவுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 2023-ம் ஆண்டு மார்ச்சில் நான் திறந்து வைத்த கீழடி அருங்காட்சியகத்தை, 2025 நவம்பர் வரை, 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் உலகெங்கும் இருந்து வந்து பார்த்திருக்கிறார்கள்.

இப்போது பொருநை அருங்காட்சியகமும் 55 ஆயிரம் சதுர அடியில் மரபார்ந்த வடிவமைப்போடு, அதே நேரத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் தொன்மையை, தமிழர்களின் நாகரிக மேன்மையை இந்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, ஜென்-சீ உள்ளிட்ட அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்து கொண்டு போக வேண்டும் என்று பார்த்து பார்த்து இவ்வளவும் செய்திருக்கிறோம். என்னுடைய இந்த எண்ணம் ஈடேற நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பங்களோடு கீழடி அருங்காட்சியகத்தையும், பொருநை அருங்காட்சியத்திற்கும் அணி அணியாக வர வேண்டும் என்று அன்போடு, உரிமையோடு அழைக்கிறேன். நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும். அதற்கான நம் அரசின் முயற்சிக்கு உங்கள் ஆதரவு வேண்டும்! கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை!- என்று உரக்கச் சொல்வோம்!. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: