'நதிகாக்கும் இரு கரைகள்': அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகல்..!!

சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மருது அழகுராஜ், நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆதரவாளர்கள் தனித்தனியாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒன்றைத் தலைமை விவகாரத்தில்  எந்த தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்காமல் மருது அழகுராஜ் நடுநிலை வகித்து வந்தார். நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சில தினங்களுக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகியுள்ளார்.  இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நதிகாக்கும் இரு கரைகள் என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருது அழகுராஜ், அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் முயற்சிகளை 4 மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டார்கள். இப்போது எனது முடிவு குறித்து யாரும் அழைத்துப் பேசவில்லை. அடுத்தக்கட்ட முடிவு பற்றி விரைவில் அறிவிக்கிறேன் எனக் கூறினார். நமது அம்மா நாளிதழில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான செய்திகளுக்கும், படங்களுக்கும் 4 மாதங்களுக்கு முன்பிருந்தே முக்கியத்துவத்தை குறைக்க சொன்னதை மருது அழகுராஜ் கூறுவதில் இருந்து உணர முடிகிறது.

மருது அழகுராஜ் பின்னணி:

முன்னர் மருது அழகுராஜ், அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நமது எம் ஜி ஆர் நாளிதழில் தலைமை ஆசிரியராக 2009ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார்.பின்னர் 2017ல் அதிமுக, எடப்பாடி கே. பழனிச்சாமி அணி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி. டி. வி. தினகரன் அணி மூன்றாக இயங்கியது. நமது எம்ஜிஆர் செய்தி நாளிதழ் டி. டி. வி. தினகரன் கையில் சென்றது.

அதிமுகவின் உள்கட்சி அரசியலில் குறுக்கீடு செய்யும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய அரசையும், நரேந்திர மோடியையும் தாக்கி, மருது அழகுராஜ், சித்திரகுப்தன் எனும் புனைபெயரில் காவி அடி, கழகத்தை அழி என்ற பெயரில் கவிதை ஒன்றை நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியிட்டார். இதனால் 16 ஆகஸ்ட் 2017 அன்று மருது அழகுராஜ் நமது எம்ஜிஆர் நாளிதழின் தலைமைச் செய்தியாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ஜெ. ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளில்,2018ல் துவக்கப்பட்ட அதிமுக கட்சியின் நமது அம்மா என்ற நாளிதழின் தலைமைச் செய்தி ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்பட்ட்டார்.

Related Stories: