கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை தடுக்காமல் அறநிலைய துறை அதிகாரிகள் தூங்குவதா? ஐகோர்ட் கண்டனம்

சென்னை: கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்காமல் அதிகாரிகள் தூங்கி கொண்டு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்  ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி உத்தரவிட்டு இருந்தது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், அறநிலையத் துறை அதிகாரிகள் மீது அவர் அவமதிப்பு வழக்கை சீனிவாசன் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் விசாரித்தனர். அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த 18 ஆக்கிரமிப்புகளில் 14 ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் வேண்டும். மாநிலம் முழுவதும் கோவிலுக்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு உள்ளனர். இதுபோன்ற, ஆக்கிரமிப்புகளை அரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஊதியத்தை மட்டும் வாங்கிக் கொள்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் வரை அறநிலையத்துறை அதிகாரி என்ன செய்கிறார்கள்? ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் வந்த பிறகும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதிகாரிகள் அமைதியாக உள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோயில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதற்கு காரணம் அறநிலையத்துறை அதிகாரிகள் முறையாக வேலை செய்யாதது தான் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 50 ஆண்டுகளாக அகற்ற வில்லை. கடந்த ஒராண்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுவது ஏற்று கொள்ள முடியாது. அறநிலையத்துறைக்கு வருமானம் வருவதால் தான், கோவில் நிலங்களை குத்தகை விட உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று கூறி விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: