பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 7ம்தேதி கவுன்சலிங் தொடங்கும்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகியோருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங் ஜூலை 7ம் தேதி தொடங்கும் என்று தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கை: தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும்  நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் பணி நிரவல், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் நடத்துவது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்கின் காரணமாக மேற்கண்ட கவுன்சலிங் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகியோருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கவுன்சலிங் ஜூலை மாதம் நடக்க உள்ளது. இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் கவுன்சலிங் ஜூலை 7ம் தேதி நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சலிங்  மாவட்டம் விட்டு மாவட்டம் 8ம் தேதியும் நடக்கும். ஒருசில நீதிமன்ற வழக்குகளில் காலிப்பணியிடங்கள் புதிதாக ஏற்பட்டால் அந்த காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கும், ஏற்கனவே பணி நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் சென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்துக்குள் மாறுதல் நடந்த கடைசி நாளான 25.2.22ம் தேதி நிலவரப்படி உள்ள காலிப்பணியிடங்களுக்குதான் மாவட்டம் விட்டு மாவட்டம் கவுன்சலிங் நடக்கும்.

2021-22 பொது மாறுதல் கவுன்சலிங்கில் ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் விருப்ப மாறுதலில் சென்றவர்கள் பெயர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் பட்டியலில் இருந்து அவர்கள் பெயர்களை நீக்க வேண்டும். உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்கேஜி, யுகேஜி பணி நிரவல் ஆகியவற்றில் சென்ற ஆசிரியர்கள் பெயர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டியதில்லை. இந்த பணி நிரவலில் மாறுதல் பெற்றவர்கள் இந்த ஆண்டு மட்டுமே  மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதலில் கலந்துகொள்ள அனுமதிப்படுவார்கள்.

தொடக்க கல்வி  2021-22ம் கல்வி ஆண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்கள் 21.6.22 அன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை கொண்டு தான் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும். அதில் திருத்தங்கள் இருந்தால் அதே படிவத்தில் திருத்தம் செய்து மீண்டும் அனுப்ப வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல் எந்த பதவியில் மாறுதலுக்கு விண்ணப்பித்தாரோ அந்த பதவியில் முதல் முதலில் பணியில் சேர்ந்த நாளை கணக்கில் கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும். பணியில் சேர்ந்த நாள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: