அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி ஆதரவாளர் மீது தாக்குதல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 10 பேர் மீது வழக்கு: ராயப்பேட்டை போலீஸ் நடவடிக்கை

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மாரிமுத்துவை தாக்கிய விவகாரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான கிருஷ்ணமூர்த்தி உள்பட 10 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக கடந்த 18ம் தேதி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தின்போது, பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்றும், அதிமுகவுக்கு இரட்டை தலைமை தான் வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கோரிக்கை வைத்து முழக்கம் எழுப்பினர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான பெரம்பூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கிருஷ்ணமூர்த்தி தனது சக கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மாரிமுத்துவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாரிமுத்துவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று மாரிமுத்து சிகிச்சை பெற்றார். அதைதொடர்ந்து, தன்னை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கியதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாரிமுத்துவை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி தாக்கியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் கிருஷ்ணமூர்த்தி உள்பட அடையாளம் தெரியாத 10 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: