உட்கட்சி பூசலால் இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி

பெரியகுளம்: கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் காலியாக உள்ள வார்டுகளுக்கு போட்டியிடும் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இதில், அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் அங்கீகரித்து (பார்ம்-6) கடிதம் வழங்க வேண்டும். இந்த கடிதத்தை பெற்றவர்கள்தான், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில், கட்சி சின்னத்துடன் போட்டியிட முடியும்.

அதிமுகவை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, கட்சியின் அங்கீகார கடிதம் மற்றும் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கான அனுமதி கடிதம் வழங்கி வந்தனர். தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளதால், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனுமதி கடிதம் பெற முடியாமல் சுயேச்சையாக போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. பெரியகுளம் நகராட்சி 26வது வார்டு உறுப்பினருக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயினுலாபுதீன் படிவம் 6 சேர்க்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுபோன்று தமிழகத்தில் பலரும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

Related Stories: