அதிமுக ஆட்சியில் முறைகேடு விசாரணைக்கு பின் இல்லத்தரசிகளுக்கு விரைவில் ₹1000 வழங்கும் திட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ரேஷன் கார்டு முறைகேடு பணிகள் முடிந்த பின்பு இல்லத்தரசிகளுக்கு ₹1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் ஓட்டேரியில் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்த பின்பு ஆர்.எஸ்.பாரதி கூறினார். கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா என்ற தலைப்பில் இல்லற இணையரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் உதயசங்கர் தலைமையில் ஓட்டேரியில் நடைபெற்ற இந்நிகழ்வில், 9 ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருமணம் நடத்தி வைக்கப்பட்ட அனைத்து ஜோடிகளுக்கும் சீர்வரிசை பொருட்களான பாத்திரங்கள், மிக்சி, கிரைண்டர், அடுப்பு, கட்டில், தலையணை உள்ளிட்ட 21 வகை சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

பின்னர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, `பெண்களின் திருமண வயதை உயர்த்தியவர் பெரியார். இப்போது, ஒவ்வொரு பெண்ணும் படிக்க மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்கள் படிப்பு முடித்து யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டு முறையில் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. பணிகள் முடிந்து கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பின் அண்ணா அல்லது கலைஞர் பிறந்தநாளில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்’ என்றார். இந்நிகழ்ச்சியில் ஐசிஎப் ஆர்.கோகுல்நாத், மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் நிலவழகன், பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: