வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாமல் ரஷ்யா தவிப்பு!: 104 ஆண்டுகளில் முதன்முறையாக அன்னியச் செலவாணி இன்றி திவால் நிலை..!!

மாஸ்கோ: வெளிநாட்டு கடன்களை திரும்பி செலுத்த முடியாமல் ரஷ்யா திவால் நிலையை எட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதன் விளைவாக ரஷ்யா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 104 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதன் முறையாக அன்னியச் செலாவணி சிக்கலில் ரஷ்யா சிக்கியுள்ளது. வெளிநாட்டு கடன்கள் உள்ளிட்ட பணங்களை திரும்ப செலுத்த முடியாமல் திவால் நிலையை அந்நாடு எட்டியுள்ளது. ரஷ்யாவின் கையிருப்பில் உள்ள டாலர் உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க கையிருப்பு வெளிநாடுகளில் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெருக்கடியை சந்திக்க தன்னிடம் பணம் இருப்பதாக ரஷ்யா கூறி வருகிறது. முன்னதாக கடந்த 1998ம் ஆண்டு ரஷ்யாவில் கரன்சி சரிவு ஏற்பட்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியபோது அப்போதைய அதிபர் போரிஸ் எல்சன் அரசு, உள்ளூர் கடனில் 40 பில்லியன் டாலர் அளவிற்கு செலுத்த தவறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: