ஆவடி: ஆவடி அருகே நேற்று மாலை அமமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொது செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று, ஓபிஎஸ்சை தனியே ரகசியமாக சந்தித்து பேச, எனக்கு அவசியமில்லை என பேட்டியளித்தார். திருவள்ளூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம், நேற்று மாலை ஆவடி அருகே அயப்பாக்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சி பொது செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் கட்சி நிர்வாகிகள், டிடிவி.தினகரனுக்கு 5 அடி வேல், வீரவாள், ஆளுயர மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் டிடிவி.தினகரன் பேசுகையில், கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம், புரட்சித் தலைவர் கட்சி வரலாற்றில் மிகப்பெரிய களங்கம். முன்பெல்லாம் புரட்சித் தலைவர், அம்மாவின் பொதுக்குழு கூட்டங்கள் சிறப்பு வாய்ந்த, சரித்திர நிகழ்வாக திகழும். அதிமுக அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. வருங்காலத்தில் அம்மாவின் கொள்கையை முன்னிறுத்தி ஆட்சி அமைத்து, அதன்பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம். தற்போது அதிமுகவின் இரட்டை இலை சின்னம் நயவஞ்சக வில்லன்களின் கையில் சிக்கியுள்ளது. அதை அமமுக தொண்டர்கள் மீட்பர். எனக்கு ஓ.பன்னீர்செல்வத்தை ரகசியமாக சந்திக்க எவ்வித அவசியமும் இல்லை. தற்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை பலகோடி கொடுத்து விலைக்கு வாங்கி, எடப்பாடி பொது செயலாளராக நினைக்கிறார். அதனால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார்.