எரிபொருட்கள் விலையேற்றம் எதிரொலி!: இலங்கையில் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு.. மக்கள் கடும் அவதி..!!

கொழும்பு: இலங்கையில் எரிபொருட்கள் விலையேற்றம் காரணமாக நாடு முழுவதும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை உள்ளது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அண்மையில் பெட்ரோல், டீசல், கோதுமை மாவு, உணவு வகைகள், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மற்றும் ஏனைய அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்த்தப்பட்டது.

இதன் காரணமாக பேருந்து டிக்கெட், போக்குவரத்து வாகனங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. எரிபொருள் வாங்குவதற்காக மக்கள், விடிவதற்கு முன்பாகவே எரிபொருள் நிலையத்துக்கு சென்று காத்திருக்கின்றனர்.  இந்நிலையில், இலங்கையில் உள்ள சிற்றுண்டிகள் முதல் அனைத்து வகையிலான உணவகங்களிலும் உணவு பொருட்களின் விலை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களை மேலும் அவதிக்குள்ளாகியுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக பல குடும்பங்கள் 3 வேளை உணவை 2 வேளையாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: