1500 படுக்கை வசதிகளுடன் கூடிய வேலூர் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேலூர்  சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை மாவட்டம், கன்னிகாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேலூர்  சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை காணொலிக் காட்சி வாயிலாக  திறந்து வைத்தார். இந்த புதிய மருத்துவமனை வளாகம் 1500 படுக்கை வசதிகளுடன், அவசர சிகிச்சை மையம், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 6 பிரத்யேக அறுவை சிகிச்சை அறைகள், கூடுதலாக 29 அறுவை சிகிச்சை அறைகள், 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, இதய சிகிச்சை மற்றும் ஆய்வகங்கள், 29 படுக்கை வசதிகளுடன் கூடிய எலும்பு- மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பிரிவு,  முழுவசதி கொண்ட ரத்த சேமிப்பு மற்றும் ரத்த நன்கொடையாளர் மையம், 50 டயாலிசிஸ் படுக்கை வசதிகள், உயர்நிலை நோய் கண்டறியும் மற்றும் சிகிச்சைக்கான  கதிரியக்கவியல் மற்றும் அதிநவீன ஆய்வகங்கள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார விநியோகத்தில் முப்பது சதவிகித தேவையினை சோலார் பேனல்கள் மூலம் பூர்த்தி செய்யும் வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்.பி, சி.எம்.சி. இயக்குனர் ஜெ.வி.பீட்டர், இணை இயக்குனர் விக்ரம் மேத்யூஸ்,  ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, ராணிப்பேட்டை  கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், சி.எம்.சி. தலைவர் பார்கஸ் வார்ஜி, இணை இயக்குனர் ஜாய் ஜான் மேமன் மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திருமாவளவன் தாயாரின் உடல் நலம் முதல்வர் நலம் விசாரித்தார்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தநிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை, திருமாவளவனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்து, விரைவில் அவர் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்ப தனது விருப்பத்தை தெரிவித்தார்.

Related Stories: