ஜூலை 1ம் தேதி முதல் கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: புதுச்சேரி நகராட்சி அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை பகுதியில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லவும், வைத்திருக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் அழகாகவும், இயற்கை பொலிவுடனும் தோற்றம் அளித்து வருகிறது. இந்த அழகிய கடற்கரை பகுதியை பொதுமக்களும், வெளி மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் தங்களுடைய உணவு பொருட்களை உட்கொண்டுவிட்டு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை கடற்கரை சாலை பகுதியில் வீசி எறிவதால் கடற்கரையின் அழகு மாசுபடுகிறது. ஆகையால், வருகிற ஜூலை 1ம் தேதி முதல் கடற்கரை சாலையில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதனை மீறுவோர் மீது புதுச்சேரி நகராட்சி சட்ட விதிகள் 1973ன் படி அபராதம் விதிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய், பிளாஸ்டிக் கோப்பை, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் கரண்டி மற்றும் பிளாஸ்டிக் பை ஆகியவற்றை கடற்கரை சாலை பகுதிகளில் கொண்டு செல்லவும், வைத்திருக்கவும், பயன்படுத்தவும், தடை விதிக்கப்படுகிறது.

மேலும், இதர பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது ரூ.10 அபராதம் விதிக்கப்பட்டு அவர்கள் கடற்கரை சாலையை விட்டு திரும்பும்போது ரசீதை காண்பித்தால் ரூ.10 திருப்பி தரப்படும். இந்த தடையானது, கடற்கரை அழகை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுப்புறச்சூழல் மற்றும் சுகாதாரம் மேம்பாட்டிற்காகவும் புதுச்சேரி நகராட்சியால் விதிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் கடைபிடித்து, நகராட்சியுடன் ஒத்துழைத்து புதுச்சேரி கடற்கரையின் இயற்கை அழகை பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: