மாமனார், மாமியாருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்-3 பேர் மீதும் வழக்கு

சேலம் : சேலத்தில் கந்துவட்டி கொடுமையில் சிக்கியதாக கூறி மாமனார், மாமியாருடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் அமானிகொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்(38) வெள்ளி பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தகுமாரி (33), தந்தை பாண்டியன் (63), தாய் கலா(58). இவர்களில் ரமேசை தவிர மற்றமூவரும் நேற்று காலை, கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு திடீரென மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களை சேலம் டவுன் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மனைவி, தாய், தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை அறிந்த ரமேஷ் டவுன் காவல் நிலையத்துக்கு விரைந்து வந்தார்.

அவரிடம் டவுன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தினார். அதில், அரசமரத்துகரட்டூரை சேர்ந்த கோவிந்தராஜ்(50) என்பவரிடம் கடந்த 15ஆண்டுகளாக கந்துவட்டிக்கு கொஞ்சம் கொஞ்சமாக ₹29.50 லட்சம் வரை வாங்கி சுரேஷ் தொழில் செய்து வந்துள்ளார். இதுவரை 50 லட்சம் ரூபாய் அளவில் சுரேஷ், கோவிந்தராஜிடம் கொடுத்துள்ளார்.இந்நிலையில் இன்னும் 63 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோவிந்தராஜ் கேட்டுள்ளார். சிறிது சிறிதாக கொடுக்கிறேன் என ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த 22ம் தேதி அமானிகொண்டலாம்பட்டியில் சாந்தகுமாரியின் அக்கா வைத்துள்ள மளிகை கடை அருகே ரமேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜ் தலைமையிலான 30பேர் ரமேசை தாக்கிவிட்டு கடையில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வீசிவிட்டு கடையை பூட்டி சாவியை எடுத்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசில் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பணத்தை கேட்டு, கோவிந்தராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் ஆட்டோவில் ஏற்றி கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கூறுகையில், ‘‘கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த காவல்நிலையங்களில் புகார் கொடுக்கலாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். எனவே பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் முதலில் புகார் கொடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்,’’ என்றார். இதனிடையே தற்கொலைக்கு முயன்றதாக 3பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: