வரும் 1ம் தேதி முதல் நெல்லை - திருச்செந்தூர் இடையே மேலும் ஒரு முன்பதிவற்ற ரயில் இயக்கம் : தூத்துக்குடிக்கும் சிறப்பு ரயில் செல்கிறது

நெல்லை : நெல்லை - திருச்செந்தூர் இடையே மேலும் ஒரு முன்பதிவற்ற சிறப்பு ரயில் வரும் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அதேநாளில் தூத்துக்குடி - நெல்லை - திருச்செந்தூர் ரயிலும் இயக்கப்பட உள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் தற்போது சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் ஒவ்வொன்றாக கூடுதல் கட்டணத்தோடு இயக்கப்பட்டு வருகின்றன.

 அந்த வகையில் இப்போது நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - செங்கோட்டை இடையே இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக திருச்செந்தூருக்கு தற்போது மற்றுமொரு ரயிலும், தூத்துக்குடி - நெல்லை - திருச்செந்தூர் சிறப்பு ரயிலும் வரும் 1ம் தேதி இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி நெல்லையில் காலை 10 மணிக்கு புறப்படும் முன்பதிவற்ற சிறப்பு ரயில் (எண்.06675) திருச்செந்தூருக்கு 11.45 மணிக்கு போய் சேருகிறது. மறுமார்க்கமாக திருச்செந்தூரில் மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 6 மணிக்கு நெல்லை வந்து சேருகிறது. இந்த ரயில் பாளை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மற்றுமொரு முன்பதிவற்ற சிறப்பு ரயில் (06671) தூத்துக்குடியில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, வாஞ்சி மணியாச்சிக்கு 9.15 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 10.25 மணிக்கு வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்பட்டு, 11 மணிக்கு நெல்லைக்கும், ஒரு மணிக்கு திருச்செந்தூருக்கும் போய் சேருகிறது. மறுமார்க்கமாக முன்பதிவற்ற சிறப்பு ரயில் (எண்.06672) திருச்செந்தூரில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 3.50 மணிக்கும், வாஞ்சி மணியாச்சிக்கு மாலை 4.50 மணிக்கும் போய் சேருகிறது.

வாஞ்சி மணியாச்சியில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி 8.10 மணிக்கு போய் சேருகிறது. இந்த ரயில் தூத்துக்குடி, மேலூர், மீளவட்டான், தட்டப்பாறை, கைலாசபுரம் வழியாக வாஞ்சிமணியாச்சிக்கும், அங்கிருந்து நாரைக்கிணறு, கங்கைகொண்டான், தாழையூத்து வழியாக நெல்லை வந்து வழக்கமான பாதையில் திருச்செந்தூர் செல்கிறது.

குருவாயூர், கோவை ரயில்களுக்கு இணைப்பு

தூத்துக்குடியில் இருந்து குருவாயூர், கோவை உள்ளிட்ட ரயில்களுக்கு முன்பு இணைப்பு பெட்டிகள் இயக்கப்பட்டன. கொரோனா காலத்திற்கு பின்னர் அவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இப்போது இணைப்பு பெட்டிகளுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், வாஞ்சி மணியாச்சியில் குருவாயூர், கோவை ரயில்களை பிடிக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 அதன்படி தூத்துக்குடியில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் ஒரு சிறப்பு ரயில், இரவு 11.25 மணிக்கு வாஞ்சி மணியாச்சி வந்து சேரும். அதிகாலையில் 3.30 மணிக்கு வாஞ்சி மணியாச்சியில் புறப்படும் ஒரு ரயில், காலை 4.15 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

Related Stories: