தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம்: ஜெசிடி பிரபாகர் பேட்டி

சென்னை:  தொண்டர்கள் அத்தனை பேரும் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜெசிடி பிரபாகர் தெரிவித்தார். அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர் ஜெ.சி.டி.பிரபாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒற்றை தலைமைக்கு இடமில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9ம் தேதி சேலத்தில் பேசும் போது சொன்னார். 14ம் தேதி தலைமை கழகத்தில் ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. 13ம் தேதி  ஒருங்கிணைப்பாளருக்கு தொடர்பு கொண்டு எதற்காக கூட்டம் கூட்டப்படுகிறது என நான் கேட்டேன். இந்த ஆண்டு பொதுக் குழு கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்களை அழைக்க முடியாது என்பதை விளக்க வேண்டும் என்பதற்காக என்று அவர் சொன்னபோது நான் ஒப்புக்கொண்டேன். பின்னர், கூட்டம் தொடங்கிய போது திடீரென்று முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி எழுந்து நின்றார். அப்போது, அவருக்கு மைக் கொடுங்கள் என்று  எடப்பாடி பழனிசாமி தான் சொன்னார்.

மைக் கொடுத்தவுடன் கட்சிக்கு ஒற்றை தலைமை தான் தேவை என வேகமாக பேச ஆரம்பித்தார். எனக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சிரியமாகவும் இருந்தது. ஏனென்றால் மைக்கை கொடு என்று சொன்னதே அவர் தான். கூட்டம் எதற்கு என்று நாங்கள் தான் விளக்கிவிட்டோம், உட்காருங்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக வேறு யாராவது பேசுகிறீர்களா என எடப்பாடி பழனிசாமி கேட்டபோது எல்லோரும் கையை தூக்கினார்கள். இரட்டை தலைமை தான் என்று சொன்ன வார்த்தையிலே, 9ம் தேதிக்கும் 14ம் தேதிக்கும் இடையிலே  என்ன நடந்தது என்று தொண்டர்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். கட்சியின் அடி மட்ட தொண்டர்கள் அத்தனை பேரும் ஓபிஎஸ் பக்கமாகஇருப்பதை பார்க்கிறேன். இவ்வாறு பேசினார்.

Related Stories: