2030ம் ஆண்டில் தமிழகம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும்: மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: 2030ம் ஆண்டில் தமிழகம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி டைடல் பூங்காவில், தொழில்துறை சார்பில்  மேம்பட்ட உற்பத்திக்கான மாநாடு நேற்று நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின்  கலந்துகொண்டு, சென்னை டைடல் பார்க்கில் ரூ.212 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ.33.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி,  டசால்ட் சிஸ்டம்ஸ் மேலாண்மை இயக்குனர் என்.ஜி.தீபக், போர்ஜ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சங்கர் வானவராயர், தொழிலதிபர்கள், தொழிலகங்களின் தலைமை செயல் அலுவலர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2030ம் ஆண்டில், நமது மாநிலத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான பாதைகளை அடையாளம் கண்டு, அப்பாதையில் நமது அரசு வெற்றிகரமாக பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து, சென்னை டைடல் பார்க்கில் ரூ.212 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் இங்கு துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையை மையமாகக் கொண்டு, மைய மற்றும் துணை மைய மாதிரி அடிப்படையில் இயங்கும் டான்கேம், மாநிலமெங்கும் இருக்கின்ற கல்வி நிறுவனங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து துணை மையங்களை நிறுவி, பரவலாக்கப்பட்ட திறன்பயிற்சி பெருக வழிவகுக்கும்.

 

டிட்கோ நிறுவனம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘சீமென்ஸ்’ உடன் இணைந்து, தமிழ்நாடு மின்னணுமயமாக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையம் மற்றும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம்  அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, விரைவில் துவக்கிவைக்கப்பட இருக்கிறது.

 

இரண்டாவதாக, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 தொழில் புத்தாக்க மையங்கள்,  இன்று என்னால் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மையங்கள், தொழில்துறை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொடக்கநிலை தொழில்முனைவோர் விரைவில் வளர்ந்திடவும், தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், உற்பத்தித் துறையின் உற்பத்தி மற்றும் போட்டித் தன்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும், திறன் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மையங்களாக விளங்கும்.

 

இவற்றின் மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதுமையான யோசனைகள், 200க்கும் மேற்பட்ட முன்மாதிரிகளை மதிப்பீடு செய்யவும், 30க்கும் மேற்பட்ட தொடக்க காலப் பட்டப்படிப்பு நிலையில் உள்ளவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த மையங்களை இயக்குவதற்காக போர்ஜ் எனப்படும் கோயம்புத்தூர் இன்னோவேஷன் மற்றும் பிசினஸ் இன்குபேட்டருடன்  சிப்காட் இணைந்து செயல்பட இருக்கிறது.

 

மூன்றாவதாக, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இந்த பூங்காக்கள் செயல்பட துவங்கும்போது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களது மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

 

நான்காவதாக, வழிகாட்டி நிறுவனமும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு கணக்கெடுப்பு இன்றைய நாள் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கான மூலதனம் நம்மிடம் இருக்கிறது. அதற்கான பணியாளர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். இதனை கருத்தில் கொண்டு திறன்மிகு மையங்களும், புத்தாக்க மையங்களும் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு தயார்நிலைப்படுத்திக் கொள்வதற்கான அரசின் முயற்சிகளில் நீங்களும் பங்கேற்று ஒத்துழைக்க வேண்டுமென்று என்று எல்லோரையும் அன்போடு  கேட்டுக் கொள்கிறேன். உலக அரங்கில் தமிழ்நாட்டினை நோக்கி கவனம் ஈர்க்கக்கூடிய முயற்சிகளாக, நிச்சயமாக இவை அனைத்தும் அமைய வேண்டும். இவ்வாறு பேசினார்.

Related Stories: