வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி: வாலிபர் வீட்டு முன்பு கள்ளக்காதலி தர்ணா

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இந்தநிலையில் இவருடைய வீட்டின் முன்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் நேற்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த வாலிபரின் குடும்பத்தாருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கூறியதாவது:ஜெயங்கொண்டத்தில் தனியார் நகைக்கடை அதிபருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த வாலிபர் எங்களது கடையில் பணிபுரிந்தார்.  

அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த என் கணவர் என்னை விவாகரத்து செய்து விட்டார்.  எனது கணவர் கொடுத்த பணம் நகைகளை அவரிடம் கொடுத்தேன். பின்னர் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்தநிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்வதாக  அறிந்தேன். எனவே அந்த வாலிபர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேலும் என்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் மற்றும் 70 பவுன் நகைகளை என்னிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என கோரி தர்ணாவில் ஈடுபட்டதாக கூறினார்.இதையடுத்து அந்த பெண்ணை சமாதானம் செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: