ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு ஊர்வலம்: ஏராளமானோர் பங்கேற்பு

கீழக்கரை: ஏர்வாடியில் இன்று காலை நடந்த சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர்.

இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் 1ம் தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஜூன் 11ம் தேதி மாலை 4 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சந்தனக்கூடு திருவிழா துவங்கியது. இன்று அதிகாலை 5மணிக்கு ஏர்வாடியில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக காலை 6 மணிக்கு தர்ஹாவிற்கு சந்தனக்கூடு ஊர்வலம் வந்தடைந்தது.

 பின்னர் தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது, உப தலைவர் சாதிக் பாட்ஷா ஆகியோர் முன்னிலையில் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 30ம் தேதி கொடியிறக்கப்பட்டு பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

Related Stories: