மயிலாடுதுறையில் மணிக்கூண்டு கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் மிரட்டல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மணிக்கூண்டு கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். மயிலாடுதுறை போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

மயிலாடுதுறையின் முக்கியமான அடையாளமாக மணிக்கூண்டு அமைத்துள்ளது. இந்த மணிக்கூண்டு 1943ம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் நினைவாக அப்துல்காதர் என்பவரால் கட்டப்பட்டது. இவ்வளவு பழமை வாய்ந்த மணிக்கூண்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்மநபர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் உஷார்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட இடத்தில் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டு வைத்ததற்கான தடயம் எதுவும் தென்படாத நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.

இதையடுத்து வெடிகுண்டு வைத்ததற்கான எந்தவொரு தடயமும் கிடைக்கப்பெறாததையடுத்து கட்டுப்பட்டு அறைக்கு வந்த செய்து தவறானது என காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு மிரட்டல் செய்தியறிந்த அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர். மேலும் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மயிலாடுதுறையில் மணிக்கூண்டு கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: