ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து ஏரி மீன்கள் விற்பனை: உள்ளூர் மீன்வளர்ப்போர் பாதிப்பு, நடவடிக்கை எடுக்கப்படுமா?

வலங்கைமான்: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து ஏரி மீன்கள் விற்பனைக்கு வருவதால் வளர்ப்பு மீன்கள் விற்பனையில் மந்த நிலை அடைந்ததை அடுத்து மீன் வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள எழுபத்தி ஒரு வருவாய் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சொந்தமான குளங்கள் உள்ளது. அதுபோன்று கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் என 75க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது. இந்நிலையில் குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாகவும், மழைநீரை சேமிக்கும் வகையிலும் தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் 100 சதவீத மானியத்தில் பல்வேறு காலகட்டங்களில்500க்கும் மேற்பட்ட பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டன. அதேபோன்று மீன் வளர்ப்பு துறையின் மூலமும் விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டன. அறநிலையத்துறைக்கு சொந்தமான குளங்கள் கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் பண்ணைக்குட்டைகள் ஆகியவற்றில் கெளுத்தி, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, ரோகு, கட்லா, விரால், மிர்கால் ஆகிய வளர்ப்பு மீன்இரகங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தன.

இவைகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு மீன்கள் அனைத்தும் விற்பனை செய்வதில் எவ்வித தேக்கமும் இல்லாமல் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ப்பு மீன் கிலோ ரூ.220 ரூபாய்க்கு விலை போனது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கப்பெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் இருந்து வளர்க்கப்படும் வளர்ப்பு மீன்கள் விற்பனைக்காக கடந்த ஆண்டு முதல் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் டன் கணக்கில் கொண்டுவரப்பட்டு வலங்கைமான் நீடாமங்கலம், கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் விலை ரூ. 120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மீன் விற்பனை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் மீன் வளர்ப்போர் அதே விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மீன் விற்பனையில் எவ்வித தடங்கலும் இல்லாத நிலையில் தற்போது மீன் விற்பனையில் மந்தம், விலை சரிவு போன்ற காரணத்தின் காரணமாக வளர்ப்பு மீன் வளர்ப்போர் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலை தொடர்ந்து ஏற்பட்டால் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.

வெளி மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் இருந்து மீன்கள் பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்கப்படுவதால் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் மீன் வளர்ப்போர் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

Related Stories: