ஈஸிசெக்- பிரெஸ்ட் ரத்த பரிசோதனை மூலம் ஆரம்பநிலை மார்பக புற்றுநோயை 90 சதவீதம் கண்டறியலாம்: அப்போலோ டாக்டர்கள் தகவல்

சென்னை: ஈஸிசெக்- பிரெஸ்ட் ரத்த பரிசோதனை மூலம் ஆரம்ப நிலை மார்பக புற்றுநோயை 90% கண்டறிய முடியும் என அப்போலோ டாக்டர்கள் தெரிவித்தனர். அறிகுறி இல்லாத நபர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறியும் ஈஸிசெக்- பிரெஸ்ட் என்ற ரத்த பரிசோதனையை டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு அப்போலோ மருத்துவமனை நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, துணை தலைவர் ப்ரீதா ரெட்டி, டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் நிறுவனர் ராஜன், அப்போலோ புற்றுநோயியல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் பிரிவின் தலைவர் தினேஷ் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி பேசியதாவது: ஈஸிசெக் -பிரெஸ்ட் செயல்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்றுநோயை எளிதாகவும் மற்றும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் நடவடிக்கையை எடுத்து இருக்கிறோம். இந்தியாவில் ஏறக்குறைய 70% பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு முற்றிய நிலையில் கண்டறியப்படுகிறது. இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண்பது அவசியமாகும். 90% துல்லியத்துடன் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் திட்டத்தை டாட்டர் ஜெனடிக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிவதுதான் சிறந்த சிகிச்சையை பெறுவதற்கான வழிமுறை. தொடர்ந்து, டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜன் பேசியதாவது: பெரும்பாலான புற்றுநோய்கள் முற்றிய நிலையிலேயே கண்டறிவதால், பக்கவிளைவு மற்றும் சிகிச்சையின் போது தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அதிக செலவு ஆகும் சிகிச்சை தேவைப்படுகிறது. ஈஸிசெக்- பிரெஸ்ட் என்பது சர்வதேச ஆராய்ச்சி மூலம், பல ஆண்டுகள் உழைப்பின் பலனாக, மக்கள் மீதான ஆய்வு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவில் எடுக்கப்படும் ரத்த பரிசோதனை மூலம் அறிகுறி வெளிப்படாத நபர்களின் ஆரம்ப நிலை புற்றுநோயை கண்டறிய முடியும். இதன்மூலம் புற்றுநோய் பாதிக்கப்படுபவர்கள் உயிர் பிழைப்பதற்கான விகிதம் அதிகரிக்கும். இவ்வாறு பேசினர்.

Related Stories: